இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது

 
Published: Tuesday , 17th April 2018 07:48:03 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
அயனாவரத்தில், கோபத்தில் காதலி கழுத்தை அறுக்க காதலன் முயன்றதில் காதலிக்கு கையில் காயம் ஏற்பட்டது, தப்பி ஓட முயன்ற காதலனை போலீஸார் கைது செய்தனர்.

அயனாவரத்தில் வசிப்பவர் ரேணுகா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும்போது அயனாவரம் சோலைத்தெருவைச் சேர்ந்த சாலமன் ராஜா (23) என்பவர் பழக்கமாக, நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

சாலமன் ராஜா தனது நண்பன் வீட்டில் தங்கி எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாகக்  காதலித்து வந்த நிலையில் சாலமன் ராஜாவின் நடத்தை சரியில்லாததால், ரேணுகா  பல முறை சுட்டிக்காட்டியும் அவர் திருந்தாததால் கடந்த இரண்டு மாத காலமாக சாலமன் ராஜாவை ரேணுகா தவிர்க்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சாலமன் ராஜா, ரேணுகாவை பலமுறை வழி மறித்துக் காரணம் கேட்டுள்ளார். 'உன் நடத்தை சரியில்லை தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கிடாதே' என்று ரேணுகா மறுத்துவிட்டார்.

இதனால் சாலமன் ராஜா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் ரேணுகாவை கடைசியாகக் கேட்பது அல்லது கொலை செய்வது என்ற திட்டத்துடன் சாலமன் ராஜா இன்று காலை கல்லூரிக்கு புறப்பட்ட ரேணுகாவை மறித்து, 'என்னை ஏன் வெறுக்கிறாய்?' என்று கேட்டுள்ளார்.

'உன் நடத்தை சரியில்லை, உனக்கும் எனக்கும் ஒத்துவராது என்னைப் படிக்கவிடு' என்று ரேணுகா கூற, 'எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது' என்று கையில் வைத்திருந்த பேப்பர் கட்டரால் ரேணுகாவின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென ரேணுகா தடுக்கும் வகையில் கையை குறுக்கே வைத்து தடுக்க பிளேடு அவர் வலது கையை கடுமையாக வெட்டியுள்ளது. நடு சாலையில் நடந்த இந்த சம்பவத்தால் ரேணுகா கூச்சலிட பொதுமக்கள் ஓடிவர இதைப்பார்த்து பயந்துபோன சாலமன் ராஜா அங்கிருந்து தப்பி ஓடினார்.

காயம்பட்ட ரேணுகா அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரேணுகா அளித்த புகாரின் பேரில் போலீஸார் சாலமன் ராஜாவைத் தேடினர். தலைமறைவாக இருந்த சாலமன் ராஜாவை மடக்கிப் பிடித்ததோடு,  காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.