உடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்

 
Published: Sunday , 15th April 2018 11:13:59 PM

Central regulatory agency gives green signal to kudankulam power production
குஜராத்தின் சூரத் நகரில் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்தன.

சூரத் நகரின் பெஸ்தான் பகுதி கிரிக்கெட் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சூரத் நகர போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் அவரது உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்தன.

இதுகுறித்து பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் கணேஷ் கோவக்கர் கூறியபோது, “சுமார் ஒரு வாரம் வரை அவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது, “சிறுமியின் உள் உறுப்புகள் சேதமடைந்துள்ளன. டெல்லி மருத்துவ துணை மாணவி போன்று இந்த சிறுமியும் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

உயிரிழந்த சிறுமி யார் என்பது தெரியவில்லை. அவரை குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.20,000 பரிசு வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர். சூரத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1,200 போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களிலும் உதவி கோரப்பட்டுள்ளது.

சூரத் நகர போலீஸ் கமிஷனர் கூறியபோது, “ஒடிசா, மேற்கு வங்கம் அல்லது வேறு மாநிலத்தில் இருந்து சிறுமியை கடத்தி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். காணாமல்போன 8,000 குழந்தைகளின் விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். உயிரிழந்த சிறுமியின் டிஎன்ஏ எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.