ஓடும் ரெயிலில் இருந்து டி.டி.ஆரை தள்ளிவிட்ட வாலிபர் கைது

 
Published: Friday , 13th April 2018 11:30:01 PM

Central regulatory agency gives green signal to kudankulam power production
காட்பாடி அருகே டிக்கெட் பரிசோதகரை, ஓடும் ரெயிலில் இருந்து வடமாநில கும்பலை சேர்ந்த 6 பேர் கீழே தள்ளிவிட்டனர்.

அவர்களை பிடிக்க ரெயில்வே போலீசார் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.


யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று காலை வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வழியாக காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ்குமார் பணியில் இருந்தார்.

பயணிகளிடம் அவர் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். காட்பாடி- லத்தேரி இடையே ரெயில் வந்தபோது ஒரு முன்பதிவு பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் பயணம் செய்தனர். அவர்களின் டிக்கெட்டுகளை காட்டுமாறு சந்தோஷ்குமார் கேட்டுள்ளார்.

அவர்களிடம் டிக்கெட் இல்லை. முன்பதிவு பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த பயணிகளின் பட்டியலிலும் அந்த 6 பேரின் பெயர்கள் இல்லை.


இதுகுறித்து, சந்தோஷ்குமார் கேட்டபோது, வடமாநில கும்பல் அவருடன் வாக்குவாதம் செய்து  சந்தோஷ்குமாரை தாக்கி உள்ளனர். இந்த நிலையில் ரெயில் சிக்னலுக்காக மெதுவாக வந்துகொண்டிருந்தது.

ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்ததை பயன்படுத்தி வடமாநில கும்பல், சந்தோஷ்குமாரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் அவர் கீழே விழுந்து லேசான காயமடைந்தார். அதற்குள் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சென்றது.

உடனே அந்த கும்பலை சேர்ந்த 6 பேரும் அந்தபெட்டியில் இருந்து இறங்கி வேறு பெட்டிக்கு மாறிச் சென்றுவிட்டனர். கீழே விழுந்ததில் காயமடைந்த சந்தோஷ்குமார் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

காட்பாடி ரெயில்வே போலீஸ் இதுபற்றி திருப்பதி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கு புறப்பட்டு சென்றனர்.

திருப்பதி போலீசார் உதவியுடன் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ஒருவரை மடக்கி பிடித்தனர். அவர் ஒடிசா மாநிலம் கண்டகாடா பகுதியை சேர்ந்த பிஷ்வாஷ்மாலிக் (வயது 19) என்பது தெரியவந்தது. அவருடன் வந்த மேலும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பிஷ்வாஷ் மாலிக்கை காட்பாடி ரெயில்வே போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அவரிடம் தப்பி ஓடிய 5 பேர் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.