கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்

 
Published: Saturday , 14th April 2018 08:16:22 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
கர்நாடக தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று குல்பர்காவில் பாஜகவினர் அவரது காரை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.


 பாஜக பிரமுகர்களுக்கு எதிராகவும், இந்துத்துவ அமைப்பினருக்கு எதிராகவும் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் வருகிற மே 12-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பிரகாஷ்ராஜ் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

கடந்த சில தினங்களாக பீஜப்பூர், குல்பர்கா, பெல்காம் உள்ளிட்ட வட கர்நாடக பகுதிகளில் பிரகாஷ்ராஜ் மேற்கொண்ட பிரச்சாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் கோபமடைந்த பாஜகவினர் பிரகாஷ்ராஜைக் கண்டித்து சுவரொட்டி மற்றும் சமூக வலைதளங்களில் எதிர்மறை தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு குல்பர்காவில் 20-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பிரகாஷ்ராஜின் காரை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பிரகாஷ்ராஜை காரை விட்டு இறங்குமாறு மிரட்டியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் பாஜகவினரை கைது செய்ததைத் தொடர்ந்து, பிரகாஷ்ராஜ் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

இது குறித்து பிரகாஷ்ராஜ் கூறுகையில், ''பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ குண்டர்களின் இத்தகைய அச்சுறுத்தலுக்கு நான் அஞ்ச மாட்டேன். இதனால் நான் இன்னும் வலிமையானவனாக மாறி வருகிறேன். தொடர்ந்து பாஜகவின் அடக்குமுறைக்கு எதிராகப் பேசுவேன்'' என்றார்.