டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது

 
Published: Monday , 16th April 2018 07:44:45 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம் போலீசிடம் சிக்கியுள்ளார்.

வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப் சகிதம் தினமும் ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஆஜராகும் அத்னான் குர்ராம் அனைவரிடமும் தன்னை ஒரு பயிற்சி டாக்டர் என அறிமுகப்படுத்தியுள்ளார்.


பயிற்சி டாக்டர்களிடம் தான் ஒரு முதுகலை மாணவர் என அறிமுகமாகியுள்ளார். 2 ஆயிரத்திற்கும் அதிகமான பயிற்சி டாக்டர்கள் அங்கு இருப்பதால் அவரின் மீது அங்கு யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

டாக்டர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, பயிற்சி டாக்டர்களின் வாட்ஸ் அப் குரூப் உள்ளிட்டவற்றிலும் அத்னான் குர்ராம் இருந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் அனைத்து பயிற்சி டாக்டர்கள் பங்கேற்ற மராத்தான் போட்டி மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ளது. அங்கும் அத்னான் குர்ராம் ஆஜராகியுள்ளார்.


அப்போது, மற்ற டாக்டர்கள் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். குர்ராமின் பதிலில் சந்தேகம் அடைந்ததை அடுத்து அவர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதனை அடுத்து, குர்ராம் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி, “குர்ராமின் மருத்துவ ஞானம்  எங்களுக்கு வியப்பை அளிக்கிறது.


தன் மீது எந்த சந்தேகமும் வராத வண்ணம் அவர் நடந்து கொண்டுள்ளார். மருத்துவர்கள் கூடவே எப்போதும் இருப்பதை குர்ராம் விரும்பியுள்ளார்” என தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட குர்ராம் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஸ்டெதஸ்கோப், வெள்ளை கோட் அணிந்து பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

எந்த குற்ற பிண்ணனியும் இல்லாத குர்ராம் எதற்காக டாக்டராக நடித்து வந்தார் என்பது தொடர்பாக விசாரித்துவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.