நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு

 
Published: Tuesday , 17th April 2018 07:40:34 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46) நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.


இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பேராசியரே கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் மகளிரணி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேசுகையில், ''ஒவ்வொரு விஷயத்திலும் நாம் கேள்வி கேட்க வேண்டும். அதிமுக அரசு நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே குறிக்கோளாக இருக்கிறது.

பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் குறிப்பிடும் உயர்மட்ட அதிகாரிகள் யார், பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும்.

அவர்களின் புகைப்படங்களை அதிமுக அரசு வெளியிட வேண்டும். உண்மை வெளியே வர வேண்டும். தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்'' என்றார்.