பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால்

 
Published: Tuesday , 17th April 2018 07:11:33 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது.


 அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து இருந்தது. உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளிடம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பேரம் பேசியது என்று தெரியவந்தது.

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியையிடம் உயர்மட்ட விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டார். விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் நியமனம் செய்யப்பட்டார்.

கவர்னர் நடவடிக்கையில் இறங்குவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும், கைது செய்யப்பட்ட பேராசிரியையிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை வெளியாகும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கவர்னர் விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பாக விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.


சிபிஐ விசாரணை என்ற கோரிக்கையானது வலுத்து உள்ளது.  பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்து உத்தரவிட்டது. அதனை இப்போது வாபஸ் பெற்றுக்கொண்டது. இதற்கிடையே வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.


பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதில் சம்பந்தப்பட்டவர்கள் என பல்வேறு சர்ச்சைகளும் தொடர்கிறது. நிர்மலா தேவியின் ஆடியோ பேச்சை மையப்படுத்தி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது,  முட்டாள்தனமானது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறிஉள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் சர்ச்சையாகி உள்ளநிலையில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், பேராசிரியர் விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

காமராஜர் பல்கலை. பேராசிரியை விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரி சந்தானம் நேர்மையானவர். இந்த விவகாரத்தில் யார் குற்றவாளியாக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.

குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் ஒருமாதம் காத்திருந்தது ஏன் என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படும். சட்ட விதிகளின்படியே சந்தானம் தலைமையில் விசாரணை குழுவானது அமைக்கப்பட்டு உள்ளது.


பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை, விசாரணை ஆணைய அறிக்கை கிடைத்தவுடன் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை குறித்து முடிவு செய்யப்படும். இப்போது தேவையில்லை என்றார்.

விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், பேராசிரியர் நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை, எனக்கு பேரனுக்கு பேரன் இருக்கும் போது , என்னை பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம். பேராசிரியை நிர்மலா தேவி யார் என்று எனக்கு தெரியாது என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
 
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது, முட்டாள்தனமானது. என்னைப்பற்றி நீங்களும் விசாரிக்கலாம், என் வாழ்க்கை வெளிப்படையானது எனவும் குறிப்பிட்டார்.


பன்வாரிலால் புரோஹித் மேலும் பேசுகையில், பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சட்டவிதிகளின்படியே, சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே சி.பி.ஐ விசாரணை குறித்தெல்லாம் முடிவு செய்ய முடியும். இப்போது அதற்கான அவசியம் கிடையாது. பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதிகளின் படி ஆளுநரே அதன் வேந்தர் ஆவார். அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரே மாநிலத்தின் தலைவர். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் காவல்துறையினரின் விசாரணை தொடரும்.

 நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். பல்கலைக்கழக செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருகிறேன்.

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை கேட்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது.


பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு பெண் உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக்குழு எடுத்துக்கொள்ளலாம். ஒளிவுமறைவற்ற விசாரணை நடைபெறும் என்றார்.

தகுதியின் அடிப்படையில் மட்டுமே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் நடைபெற்றது என  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்தார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் விதிகள் அனைத்தும் பின்பற்றப்பட்டன என குறிப்பிட்டார். துணைவேந்தர் நியமனத்தில் மாநில அடிப்படையில் பாகுபாடு காட்டப்படவில்லை.

தேடுதல் குழு 3 பேரை பரிந்துரை செய்தது. அவர்களிடம் நான் நேர்காணல் நடத்தினேன். 3 பேரில் சூரப்பா மட்டுமே பொறியியல் பின்னணி கொண்டவர் என்றார் பன்வாரிலால்.

குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்படாமல், எனது பணியை சட்டத்துக்குட்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டு உள்ளார்.  


காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியுடன் இன்றுகூட தொலைபேசியில் பேசினேன், காவிரிமேலாண்மை வாரியத்துக்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நான் எப்போதெல்லாம் டெல்லி சென்றேனோ, அப்போதெல்லாம் காவிரி விவகாரம் தொடர்பாக பேசி உள்ளேன். காவிரி விவகாரம் என்னுடைய இதயத்தில் இருக்கிறது என்றார் பன்வாரிலால்.