பேராசிரியை நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால்

 
Published: Tuesday , 17th April 2018 06:57:49 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது.


அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து இருந்தது.


உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளிடம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பேரம் பேசியது என்று தெரியவந்தது.

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியையிடம் உயர்மட்ட விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டார். விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் நியமனம் செய்யப்பட்டார்.

கவர்னர் நடவடிக்கையில் இறங்குவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும், கைது செய்யப்பட்ட பேராசிரியையிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை வெளியாகும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


கவர்னர் அறிவித்துள்ள விசாரணை குழுவால் பாலியல் ஊழலை மூடிமறைக்க முயற்சி நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். கவர்னர் விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பாக விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. சிபிஐ விசாரணை என்ற கோரிக்கையானது வலுத்து உள்ளது.

இதற்கிடையே இதில் சம்பந்தப்பட்டவர்கள் என பல்வேறு சர்ச்சைகளும் தொடர்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் பன்வாரிலால், மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது,

மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே சி.பி.ஐ விசாரணை குறித்தெல்லாம் முடிவு செய்ய முடியும் என்றார்.  

விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், பேராசிரியர் நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை, எனக்கு பேரனுக்கு பேரன் இருக்கும் போது , என்னை பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம். பேராசிரியை நிர்மலா தேவி யார் என்று எனக்கு தெரியாது என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.