போனில் கதறி அழுத சிம்பு: 'அவரது மனிதாபிமானத்துக்கு நன்றி'- வைகோ உருக்கம்

 
Published: Saturday , 14th April 2018 08:09:03 AM

Central regulatory agency gives green signal to kudankulam power production
தனது மருமகன் சிகிச்சையில் இருந்தபோது பேசிய நடிகர் சிம்பு போனில் கதறி அழுததாக வைகோ உருக்கமாக நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் காவிரி பிரச்சினை தீயாகப் பற்றி எரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல தொண்டர்கள் தீக்குளித்து வருகின்றனர். சிலர் தீக்குளிப்பு முயற்சியில் மீட்கப்பட்டனர். யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் (50)கடந்த வெள்ளிக்கிழமை காலை தீக்குளித்தார். தீவிர சிகிச்சை பலன் தராமல் சரவண சுரேஷ் இன்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மரியாதைக்காக கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மாலை 6 மணி அளவில் கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள் பட்டி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மருமகன் உடல் அடக்கம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:

“சரவண சுரேஷ் உயிர் பிரிவதற்கு 10 நிமிடம் முன்பு ஸ்டாலின் என்னிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார். நான் இதற்கு முன் பேசி பழகியிராத நடிகர் சிம்பு போனிலேயே கதறி அழுதார். தீக்குளித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து இரவெல்லாம் இறைவனைப் பிரார்த்தித்தேன் என்று அவர் கதறி அழுதார்.

எனக்கும் சிம்புவுக்கும் முன்பின் பழக்கம் கிடையாது. அவரது மனிதாபிமானத்திற்கு நான் நன்றி தெரிவித்தேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முழக்கமிட்டவாறு சரவண சுரேஷ் உயிரிழந்திருக்கிறார். நான் சொல்கிறேன் நரேந்திர மோடி அரசு எந்த நாளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. நான் சொல்கிறேன் எக்காலத்திலும் அமைக்காது'' என்று வைகோ தெரிவித்தார்.