ஆரல்வாய்மொழியில் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது
First Published : Monday , 20th March 2017 11:09:58 AM
Last Updated : Monday , 20th March 2017 11:09:58 AM
ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் ஆதித்தன். செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி கில்டாராணி என்ற ஷாலினி (வயது 27).
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. சமீபத்தில் அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.
மங்கம்மாள்சாலையில் உள்ள வீட்டில் ஷாலினி மட்டும் தனியாக இருந்தார். கடந்த 15-ந் தேதி காலை ஷாலினி கொலை செய்யப்பட்டு படுக்கையறையில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து மற்றும் கைகளில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணையை முடுக்கி விட்டார். ஷாலினி கொலை தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஷாலினி நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மேலும் அருகில் உள்ள செங்கல் சூளைகளுக்கும் அடிக்கடி வேலைக்கு செல்வார். அப்போது அவருக்கு ஏராளமான வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர்களில் பலர் ஷாலினி தனிமையில் இருப்பதை பயன்படுத்தி அவரது வீட்டுக்கே சென்று அவருடன் உல்லாசம் அனுபவித்தனர். இதனால் ஷாலினியுடன் நெருக்கமாக இருந்த வாலிபர்களே அவரை கொன்று இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
ஷாலினியுடன் தொடர்பு வைத்திருந்த 20-க்கும் மேற்பட்ட வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால் அதில் எந்தவொரு துப்பும் துலங்கவில்லை.
இதையடுத்து ஷாலினியின் கணவர் மீது போலீசாரின் சந்தேகம் திரும்பியது.
ஷாலினி மின் கட்டணம் செலுத்த பணம் கேட்டிருந்ததாகவும், அதனை கொடுக்கச் சென்றபோது தான் ஷாலினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார். பின்னர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஷாலினியை கொன்றது அவரது கணவர் ஆதித்தன் என்பது உறுதியானது. அவரை இன்று போலீசார் கைது செய்தனர்.
ஷாலினி பிற வாலிபர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது ஆதித்தனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தட்டிக்கேட்டு அவர் அடிக்கடி ஷாலினியுடன் தகராறு செய்துள்ளார்.
கடந்த 14-ந் தேதி ஆதித்தன், மங்கம்மாள்சாலையில் உள்ள செங்கல் சூளைக்கு இரவு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஷாலினிக்கு பணம் கொடுத்து வரலாம் என நினைத்து அவர் ஷாலினி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் இருந்து 2 வாலிபர்கள் வெளியே சென்றுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆதித்தன், ஷாலினியுடன் தகராறு செய்து அவரை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். அதிலும் ஆத்திரம் தீராமல் கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் செங்கல் சூளைக்கு சென்று வழக்கமாக வேலை பார்த்தார்.
காலையில் எதுவும் தெரியாததுபோல் ஷாலினி வீட்டுக்கு வந்து அவரை யாரோ கொன்று விட்டதாக நாடகமாடினார். ஆதித்தன் கண்ணீர் விட்டு அழுததை பார்த்து அக்கம்பக்கத்தினர் நம்பி உள்ளனர். உடனே அவர்களையும் கையோடு அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையம் சென்று புகார் செய்துள்ளார்.
ஷாலினி பலருடன் தொடர்பு வைத்திருந்தால் அந்த நபர்கள் மீது பழி போடும் நோக்கில் ஷாலினியை ஆதித்தன் நிர்வாண கோலத்துக்கு கொண்டு வந்துள்ளார். மேலும் கொள்ளை நாடகம் ஆட பீரோவில் இருந்த பொருட்களை வெளியே வீசி எறிந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைதான ஆதித்தனை இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.